இளைஞருக்கு ரூ.5 லட்சம் கொடுத்த பிரதமர் மோடி - விழிபிதுங்கிய வங்கி அதிகாரிகள்
வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 5 லட்சத்தை செலவு செய்த இளைஞர் அதனை திருப்பித்தர மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கி கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் ரூ. 5.5 லட்சம் வரவு வைக்கப்பட்டது. தன் கணக்குக்கு இவ்வளவு பணம் வந்ததை வங்கிக்கும் தெரியப்படுத்தாமல் அனைத்தையும் அவர் செலவு செய்துள்ளார்.
இதனிடையே தங்களின் தவறை உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதை உறுதி செய்த கையோடு, அக்கவுண்டை சோதனை செய்து பார்த்ததில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வங்கி நிர்வாகம் அந்த இளைஞரை தொடர்புக்கொண்டு நடந்த தவறை விளக்கி பணத்தை திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளது. ஆனால் ரஞ்சித் தாஸோ, பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி அளித்துள்ளார்.
அதில் முதல் தவணையாக 5.5 லட்சம் வந்துள்ளதாக எண்ணி அனைத்தையும் செலவு செய்து விட்டதாகவும் , எனவே திருப்பித் தரமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருதரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.