வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைப்பு - போலீசார் தீவிர விசாரணை!
உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில இளைஞர் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கமோல் பகுதியைச் சேர்ந்தவர் பவன்குமார், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி வீட்டுக்கு டைல்ஸ் போடுவதற்காக கடந்த 3-ம் தேதி தனது நண்பர்கள் இருவருடன் வந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ம் பவன்குமார் உடன் வந்த ஒரு இளைஞர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று விட்டார். இந்நிலையில் மற்றொரு வாலிபர் தலைமறைவாகி விட்டார். இதனிடையே பவன்குமாரின் உறவினர் சோனாசைனி என்பவர் பவன்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைக்கப் பட்டு இருந்தது.
தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் சோனாசைனி இன்று காலை பூ.மாம்பாக்கம் கிராமத்திற்கு நேரில் வந்து உள்ளார். அங்கு தேடிப் பார்த்தபோது பவன்குமார் இல்லாத நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சோனாசைனி வீட்டின் உள்புறம் தேடிப்பார்த்து உள்ளார்.
அப்போது வீட்டின் முகப்பு பகுதியில் பவன்குமாரின் ஆடைகள் ரத்தக் கறையுடன் இருந்ததை பார்த்துள்ளார். இந்த தகவல் அந்த கிராமத்தில் தீயாக பரவியது. உடனடியாக இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்த பொழுது ரமேஷ் வீட்டின் ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அதில் யாரேனும் அடித்து கொலை செய்து புதைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையினர் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர் அதில் பவன் குமார் உடல் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பவன்குமார் உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது பவன் குமாரின் தலையில் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டு அதே இடத்தில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவன்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரை யார் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொலை செய்து புதைத்தது என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியதாக கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் போடும் வேலைக்கு வந்த வடமாநில வாலிபர் கொலை செய்து வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.