காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமி : வைரலான வீடியோவால் அரசிடம் இருந்து வந்த அதிரடி ’கால்’

By Swetha Subash May 28, 2022 11:17 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

பீகாரின் ஜமுய் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா குமாரி. 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமமான ஃபதேபூரில் டிராக்டரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்கு உள்ளானார் சீமா.

சிகிச்சையின்போது காயமடைந்த இடது கால் துண்டிக்கப்படாவிட்டால், அவள் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் சீமாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் சீமா உயிரே முக்கியம் என முடிவு செய்து காலை எடுக்க சம்மதிக்கவே, இடது காலை நீக்கி சீமாவின் உயிரை காப்பாற்றினர்.

காலை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமி : வைரலான வீடியோவால் அரசிடம் இருந்து வந்த அதிரடி ’கால்’ | Bihar Girl Gets Prosthetic Leg Education Ministry

ஒரு காலை இழந்தபோதும், சீமா தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த ஒற்றைக் காலுடன் குதித்தவாறே தன் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வருகிறார். “நான் படித்து ஆசிரியராக விரும்புகிறேன். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே என் குறிக்கோள்” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சீமா.

சீமா பள்ளிக்கு ஒற்றைக் காலில் குதித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து ஜமுய் மாவட்ட ஆட்சியர் அவனிஷ் குமார் சீமாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு மூன்று சக்கர வண்டி ஒன்றை வழங்கினார்.

இந்நிலையில் சிறுமி சீமா ஒற்றை காலால் பள்ளிக்கு சென்று வருவதை அறிந்த அம்மாநில கல்வித்துறை அவருக்கு உதவி கரம் நீட்டியுள்ளது.

சிறுமி தினமும் சிரமம்படும் துயர்மிக்க வீடியோவை பார்த்து அவருக்கு செயற்கை கால்கள் பொறுத்தவுள்ளதாக பீகார் மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.