பிகில் படத்தை காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்! பொதுமக்கள் வியப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
சென்னையில் விபத்தில் பலத்த காயம் அடைந்த 10 வயது சிறுவனுக்கு விஜய்யின் பிகில் படத்தை காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கணேசபுரத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன், தன் மாமா அரவிந்துடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கீழே விழுந்ததில் நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்..
பலத்த காயம் அடைந்ததால் சசிவர்ஷனுக்கு தையல் போட மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். தையல் போடுவதற்காக சிறுவனுக்கு மருத்துவர்கள் ஊசி போட முயற்சி செய்தனர்.
இதனால் பயத்தில் சிறுவன் அலறினான். மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும் வலியில் துடித்தாலும் பரவாயில்லை, ஊசி மட்டும் போட விட மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் சசிவர்ஷன். அப்பொழுது அங்கிருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சசிவர்ஷனிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்க விஜய் தான் பிடிக்கும் என்று பதில் அளித்திருக்கிறார்.
மேலும் காயத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையிலும் சிறுவன் தொடர்ந்து விஜய் பற்றி பேசியிருக்கிறார். இதையடுத்து ஜின்னா தன் செல்போனில் பிகில் படத்தை போட்டு சசிவர்ஷன் கையில் கொடுத்திருக்கிறார்.

சசிவர்ஷன் தன்னை மறந்து பிகில் படத்தை பார்த்து ரசிக்க, மருத்துவர்களோ இது தான் நேரம் என்று ஊசி போட்டு, தையல் போட்டு சிகிச்சை அளித்துவிட்டனர்.
ஊசியே வேண்டாம் என்று அடம் பிடித்த சசிவர்ஷன் தையல் போட்டபோது கூட எதிர்க்காமல் பிகில் படத்தை ஆர்வமாக பார்த்திருக்கிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.