இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் மோடி தான் - விவசாய சங்க தலைவர்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நூறு நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயார், ஆனால் அவற்றை திரும்ப பெற முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது. இதனையடுத்து விவசாயிகளும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தற்போது தங்களது எதிர்ப்பை வலுவாக காட்டும் நோக்கில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு சென்று பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்க அம்மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கொல்கத்தாவில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயி சங்கங்கள் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது, "மோடி அரசாங்கம் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே புரிந்து வைத்திருக்கிறது என்பதை நாம் இன்று உணர்ந்துள்ளோம். ஆகையால் நாம் அவர்களை தேர்தலில் தோற்கடிப்பது அவசியம்.
உங்கள் கைகளில் மிகப்பெரிய ஆயுதம். அது உங்கள் வாக்கு, உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க ஆனால் மோடிக்கு போடாதீங்க. இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே" என்று பேசினார்.