ரோகித் சர்மாவுக்கு காத்திருக்கும் சவால் - பீதியை கிளப்பும் ரவி சாஸ்திரி
இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு ஒரு சவால் காத்திருப்பதாக முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தனது டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த பிறகு இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்யாமல் இருந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு ரோகித் சர்மாவிற்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது.
நியூசிலாந்து அணிக்கெதிராக தனது டி20 கேப்டன் பொறுப்பை தொடங்கிய ரோகித் சர்மா தென்னாபிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பைதொடங்க இருக்கிறார்.
இதனிடையெ ஒருநாள் போட்டிகளுக்கு புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் சர்மாவிற்கு ஒரு சவால் காத்திருப்பதாக முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
அதாவது இந்திய அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் என இருவரும் சேர்ந்த கலவையாக இருந்தால் எதிர்காலத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குறைந்தபட்சம் இன்னும் இரண்டு வருடம் ரோகித் சர்மா லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டனாக இருப்பார்.
அதற்குள் இளம் வீரர்கள் பலரை அவர் வளர்த்துவிட வேண்டும். இப்போதிருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்த வருடங்களில் வயது அதிகமானவர்களாக இருப்பார்கள்.இப்போது பந்து வீசும் துல்லியம் அப்போதும் அவர்களுக்கு இருக்கும் என கூற இயலாது.
ஆகையால் இந்த இரண்டு வருடங்களுக்குள் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரை அணியில் எடுத்து வெளியில் காத்திருக்க வைக்க வேண்டும். சரியான தருணம் வரும்போது அவர்களுக்கு ஒரு சில வாய்ப்புகளும் கொடுக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு மட்டும் இந்திய அணியை பார்த்துவிட முடியாது.
இவர் சென்ற பிறகும் அணி எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என தொலைநோக்குடன் ரோகித் சர்மா செயல்பட வேண்டும். தனக்கு பின்னும் இந்திய அணி பல வருடங்கள் இருக்கும் என அவர் நினைவில் கொண்டு இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மிகப்பெரிய சவால். இதனை ரோகித் சர்மா நன்றாக செய்வார் என நான் நம்புகிறேன் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.