நாங்கள் இதை மறக்க மாட்டோம்... உங்களை வேட்டையாடுவோம் - ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

Biden warns Kabul airport attack KabulAirportBlast
By Irumporai Aug 27, 2021 02:50 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

நேற்று காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் அமெரிக்கப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 140-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

காபூல் நகரம் தாலிபன்களின் அதிகாரத்திற்கு வந்த பிறகு 1 லட்சம் மக்கள் ஆப்கானில் இருந்து விமானங்கள் மூலமாக வெளியேற்றப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி வரும் 31ஆம் தேதிக்குள் படைகள் அனைத்தும் முற்றிலுமாக வெளியேற உள்ளதால். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு காபூல் விமான நிலையத்தின் அபே நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது.

அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த விமான நிலையத்துக்கு அருகேயுள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலின் போது அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 60 ஆப்கானியர்கள் பலியாகி இருக்கலாம் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திடம் கூறியுள்ளார்.

மேலும் பெண்டகன் அதிகாரிகளின் தகவலின் படி 11 அமெரிக்க கடற்படையினர் மற்றும் கடற்படை மருத்துவ பணியாளர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் மேலும் 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், கூறியுள்ளனர்.

ஆப்கானில் நடந்த இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டணங்களை தெரிவித்து வருகின்றன .குறிப்பாக இந்த தாக்குதலை முதலில் பென்டகன் அமைப்புதான் உறுதி செய்தது.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததும் உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிறரது உயிரைக் காப்பாற்றும் தன்னல நோக்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் ஹீரோக்கள் " என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், தாக்குதல் குறித்து காட்டமாகப் பேசிய  ஜோ பைடன்:

இந்தத் தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ளட்டும்.

நாங்கள் இதை மன்னிக்க மாட்டோம். நாங்கள் இதை மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும்'என்று தெரிவித்தார்.

பொறுப்பேற்ற ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு:

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.