‘தாலிபான்களை எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’ - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

joebiden afghanistan taliban talibanhandover
By Petchi Avudaiappan Aug 16, 2021 11:47 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனையடுத்து ஆப்கான் நாட்டின் பெயர் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமெரிக்க படைகளை அதிபர் பைடன் வெளியேற்றிய விதம், திட்டமின்றி படைகளை வாபஸ் வாங்கிய விதம் ஆகியவை விமர்சனங்களுக்குள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் ஆப்கான் விவகாரம் குறித்து இன்று பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் நடக்கும் விஷயங்களை பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைக்க வேண்டும் என்று அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையுமல்ல என அவர் தெரிவித்தார்.

மேலும் அல்கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டதாகவும்,எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும் எனவும் பைடன் கூறியுள்ளார். ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத போது நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? என கேள்வியெழுப்பிய பைடன், ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என்றும், அப்படி ஒரு போரில் மரணிக்க வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை ஒற்றுமைப்படுத்த எத்தனை ஆண்டுகள், எவ்வளவு படைகள் முயன்றாலும் முடியாது. அங்கு நடந்து வரும் விஷயங்களை கவனித்து வருவதோடு அங்குள்ள அமெரிக்கர்களை காப்பது மட்டுமே என் நோக்கம். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அமெரிக்க படை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

20 வருடமாக போர் நடக்கிறது, இந்த போரை எதிர்கொள்ளும் 4வது அதிபர் நான். இதே போரை நான் இன்னொரு அதிபருக்கு கடத்தி செல்ல மாட்டேன். என்னோடு இந்த போர் முடியட்டும், முந்தைய அதிபர்கள் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்.. எனக்கு இது வருத்தம் தருகிறது. ஒசாமா பின் லேடனை கொன்றதோடு அமெரிக்காவின் பணி முடிந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானை மாற்றுவது நம் வேலை இல்லை. ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது. இது நம்முடைய வேலை இல்லை. இது நம்முடைய தேசிய பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை. இதில் எப்போதும் கவனம் செலுத்த முடியாது. அமெரிக்க வீரர்கள் குடும்பத்தை விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் உயிரை கொடுத்து போராட முடியாது என ஜோ பைடன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.