கொரோனா எங்கே தோன்றியது என விசாரியுங்கள் - அமெரிக்க உளவுத்துறைக்கு ஜோ பைடன் உத்தரவு

America Corona China Joe Biden
By mohanelango May 27, 2021 01:10 PM GMT
Report

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அதன் கோரத்தாண்டவம் பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது. 

மே 27-ம் தேதி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் கொரோனா தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் எங்கே தோன்றி பரவத் தொடங்கியது என்கிற கேள்விக்கு தற்போது வரை தெளிவான விடை கிடைக்கவில்லை. 

பல்வேறு கட்டுக்கதைகள் இருந்து வருவதால் இது பற்றி குழப்பமே நீடித்து வருகிறது. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வூஹானில் பதிவானது. அதன் பிறகு மற்ற நாடுகளுக்கு பரவியது.

வூஹானில் உள்ள விராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது. சீனா தான் இதற்கு காரணம் என்கிற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.

கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி ஆராய சீனா பயணித்த உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு தெளிவான முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி விசாரிக்க அமெரிக்க உளவுத்துறை மற்றும் உளவு அமைப்புகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அதில், “கொரோனா வைரஸ் தோற்றம் தொடர்பான நம்முடைய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகள் தற்போது வரை மேற்கொண்டுள்ள ஆய்வில் இரண்டு விஷயங்களை முன்வைத்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவியதா? இல்லை ஆய்வக விபத்திலிருந்து பரவியதா? என இரண்டு சாத்தியங்கள் நம் முன் உள்ளன. ஆனால் எதிலும் தெளிவான முடிவுக்கு நாம் முன்வர முடியவில்லை.

இரண்டு சாத்தியங்களும் வாய்ப்பு இருப்பதாகவே தகவல்கள் உள்ளன. எனவே இது தொடர்பாக மேலும் விசாரித்து 90 நாட்களுக்குள் அதன் அறிக்கை என்னிடம் சமர்பிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணையில் சீனா தொடர்பான கேள்விகள் தொடர்பாகவும் ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதே சமயம் சர்வதேச அளவிலும் நம்முடைய நட்பு சக்திகளை இந்த விசாரணையில் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் மிக அதிக அளவில் 3.30 கோடி பாதிப்புகளையும் 6 லட்சத்துக்கும் அதிகமான மரணங்களையும் சந்தித்துள்ள அமெரிக்கா தன்னுடைய தவறுகளை சரி செய்யாமல் சீனாவை பலிகடா ஆக்க பார்க்கிறது” என சீனா பதிலடி கொடுத்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணம் கசிந்து அதில் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் கடந்த 2019 நவம்பரிலே மூன்று ஆய்வாளர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி வெளியிட்டிருந்தது.