ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா - உலக நாடுகள் அதிர்ச்சி
உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
நேற்று முதல் தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 விமான நிலையங்கள், 3 கட்டணச்சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில் போரை தேர்ந்தெடுத்த ரஷ்யாவும், அந்நாட்டு அதிபர் புதினும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். எனவே ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.
மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி., உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.ரஷ்ய அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.