பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்.. அதிர்ச்சி தகவல்
மாணவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை வழங்கியதாக போபாலில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போதைய துணை வேந்தராக இருக்கும் டாக்டர் பிரசாந்த் பிள்ளையும், முன்னாள் துணை வேந்தராக இருந்த டாக்டர் எஸ் எஸ் குஷ்வாவும் இணைந்து மாணவர்களுக்கு முறைகேடாக பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்கலைக்கழகத்தின் மூலம் 101 சான்றிதழ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக மலாக்பேட்டை, ஆசிப் நகர், முஷீராபாத், சடார்காட் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவர்களிடம் இருந்து 44 சான்றிதழ்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதில் பி.டெக் மற்றும் பி.இ. படிப்புகளை முடித்ததாக 13 பேருக்கும், எம்.பி.ஏ., எம்.எஸ்சி., முடித்ததாக 31 பேருக்கும் முறைகேடாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் துணை வேந்தர் குஷ்வா, இந்நாள் துணை வேந்தர் பிரசாந்த் பிள்ளை, உதவி பேராசிரியர் கேடான் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஹைதராபாத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முறைகேடு செய்ததாக 7 இடைத்தரகர்கள் ,19 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாணவர்களின் பெற்றோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். போலீசார் முன்பு ஆஜராக 6 மாணவர்களின் பெற்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.