ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார் இயக்குநர் பாரதிராஜா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Bharathiraja
By Nandhini Sep 02, 2022 10:17 AM GMT
Report

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பாரதிராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுசுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

கடந்த மாதம் 23ம் தேதி இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, இயக்குநர் பாரதிராஜா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பாரதிராஜாவிற்கு சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு, உடலில் உப்பின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் குறைவாக உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதனால், பாரதிராஜா சோர்வாக இருந்ததால் அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

மேல் சிகிச்சைக்காக அனுமதி

இதனையடுத்து, உடல்நலக்குறைவால் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். 

ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார்

இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து பொது பிரிவிற்கு தற்போது இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம் பெற வேண்டி திரைப்பலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பிரார்த்தனைகளையும் செய்த நிலையில், இந்தச் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.