என்னை வாரிவிடுபவரே இளையராஜா தான் : இயக்குநர் பாரதி ராஜா பரபரப்பு பேச்சு

ilaiyaraaja பாரதிராஜா directrorbharathiraja இளையராஜா உலகம்மை
By Petchi Avudaiappan Apr 07, 2022 12:35 AM GMT
Report

'உலகம்மை ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட இயக்குநர் பாரதிராஜா இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் இசைக் கூடத்தில் விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'உலகம்மை ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படம் எழுத்தாளர் சமுத்திரம் எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் முத்துலிங்கம் உட்பட பலரும் கலந்துக் கொண்டு பேசினர். அப்போது  இளையராஜாவும், பாரதிராஜாவும்ஒருவரை ஒருவர் மேடையில் வெகுவாகப் பாராட்டியும், பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பேசியது அனைவரையும் கவர்ந்தது. 

இளையராஜா சூரியன் போன்றவன். இதுவரை எனது படங்கள் பேசப்பட நான் எடுத்த காட்சியை விட அவன் அமைத்த பின்னணி இசைதான் காரணம். இளையராஜாவின் 5 விரல்களிலும் 5 சரஸ்வதி இருக்கும். நாங்கள் நாடகங்களில் நடித்தபோது என்னை இளையராஜா வசனம் பேசவே விடமாட்டான். என்னை எவ்வளவு வாரிவிட வேண்டுமோ அதை செய்வான். ரொமான்டிக் தெரிந்தவன் என்பதால் எந்த வரியை யார் எழுதினாலும் இளையராஜா இசை அமைத்தால் அதற்கு உயிர் கிடைக்கும் என பாரதி ராஜா கூறினார். 

அப்போது இடை இடையே பேசிய இளையராஜா அல்லி நகரத்தில் நாடகம் நடித்தபோது பாரதிராஜா மேடையில் நடித்துக் கொண்டிருப்பார். நான் கீழே அமர்ந்து ஆர்மோனியம் இசைப்பேன். அப்போது என்னுடைய சட்டையை வலுக்கட்டாயமாக வாங்கி போட்டுக் கொள்வார். மறுநாள் அந்த சட்டையை சாலையில் போட்டு சென்றால் அதை அனைவரும் பாரதிராஜாவின் சட்டை என்று நினைத்து விடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கும் என தெரிவித்தார். 

இன்று சினிமாவில் இருக்கும் எல்லோரும் பாரதிராஜாவின் ஆட்கள்தான். நான் இந்தப் படம் பண்ணி கொடுக்க ஒப்புக்கொண்டதே படக்குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான் என பாரதிராஜா கூறினார்.