இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இறுதி விடை: அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Tamil Cinema Bharathiraja
By Vinoja Jun 11, 2026 12:50 PM GMT
Report

இயக்குநர் பாரதிராஜா உடல் காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா (84), நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இறுதி விடை: அரசு மரியாதையுடன் நல்லடக்கம் | Bharathiraja Body Laid To Rest With State Honors

அவரது மறைவையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் தேனி மாவட்டம் காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இறுதி விடை: அரசு மரியாதையுடன் நல்லடக்கம் | Bharathiraja Body Laid To Rest With State Honors

தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, திரையுலகினர் மற்றும் ரசிகர்களும் பெருந்திரளாக பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இறுதிச் சடங்கில் இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், பார்த்திபன், நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர்.

முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 4.40 மணியளவில் அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.