கொரோனாவுக்கு புது வகையான தடுப்பூசி - பாரத் பயோடெக் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் தினசரி பதிவாகும் பாதிப்புகள், மரணங்களில் அதிகமானவை இந்தியாவில் தான் பதிவாகின்றன.
இதனால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வருகின்றன. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்நிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மூக்கு வழியாக செலுத்தப்படும் புதிய வகையான கொரோனா தடுப்பூசியும் ஆய்வில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் கிருஷ்னா எல்லா சமீபத்திய பேட்டியில், “கொரோனா தடுப்பூசிகள் நுரையீரல் கீழ்ப்பகுதி மட்டுமே பாதுகாக்கின்றனர். நுரையீரலின் மேற்பகுதி மற்றும் மூக்கு பாதுகாக்கப்படுவதில்லை.
இதற்கான நாசல் என்று சொல்லப்படும் தடுப்பூசி வகை பலனளிக்கும். இவை மூக்கு வழியாக செலுத்தப்படும். இது பற்றிய முதல் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. மே மாதம் இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றார்.