திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் - மெய்சிலிர்த்து பார்த்த ராம்நாத் கோவிந்த்!
கேரளாவில் திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநங்கைகள்
கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நீண்ட நாட்களாவே பரத நாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டி வந்த நிலையில், ஒரு தனியார் அறக்கட்டளை மூலம் பிரபல பரதநாட்டிய கலைஞர் சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நீண்ட பயிற்சிக்கு பிறகு பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடத்த சஞ்சனா சந்திரா முடிவு செய்தார். இதற்காக பயிற்சி பெற்ற அகாடமி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பரதநாட்டிய அரங்கேற்றம்
திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
அழைப்பை ஏற்று கொண்ட ராம்நாத் கோவிந்த் கேரளாவிற்கு வருகை தந்து திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன்.
இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாக இருக்கும் என்று தெரிவித்தார்.