“என்னை மன்னிச்சிடுங்க” - மோடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட கே.பாக்யராஜ்

BJP pmmodi TNBJP directorbhagyaraj
By Petchi Avudaiappan Apr 20, 2022 04:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பிரதமர் மோடி குறித்து பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னையில் உள்ள கமலாலயத்தில் இன்று பாஜக தலைமையில் நடைபெற்ற 'பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா - 2022' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ், கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவிற்கு மோடி போன்றவர்கள் தேவை. மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்" என்று கூறியிருந்தார்.

மேலும் தாய் வயிற்றில் சிசுவுக்கு 4வது மாதம் காது உருவாகும். 5வது மாதம் வாய் உருவாகும். ஆனால் மோடியை விமர்சனம் செய்பவர்கள் 3 மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்வேன். காரணம் நல்லதை எவனும் பேசமாட்டான் பிறர் பேசினாலும் காது கொடுத்து கேட்கமாட்டான். விமர்சனம் செய்பவர்களை பிரதமர் மோடி இப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பாக்யராஜ் தெரிவித்திருந்தார். அவர் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மன்னிப்பு கேட்டு பாக்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுப் பேசிய வார்த்தை தவறான அர்த்தத்தை உண்டாக்கியது என்று கேள்விப்பட்டேன். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். அதேசமயம் மாற்றுத்திறனாளிகள் வேறு, குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் வேறு. கிராமத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கூறுவார்கள் அதைத்தான் நான் கூறினேன். மாற்றுத்திறனாளிகளை நான் எப்போதும் அக்கறையுடன் தான் பார்ப்பேன். நான் பேசியது அவர்களைக் காயப்படுத்தினால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்