பஞ்சாப் முதல்வராக 16 ஆம் தேதி பதவியேற்கிறார் பக்வந்த் மன் - ஆட்சியமைக்க உரிமை கோரினார்

பஞ்சாபில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அம்மாநில ஆளுநரை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பக்வந்த் மன் சந்தித்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் அமோகமாக வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதனிடையே பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ராஜ் பவனுக்குச் சென்று இன்று ஆளுநரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மன் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அம்மாநிலத்தில் இம்முறை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடக்காமல் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.