விருதுநகர் பெருமையை காட்டும் தலங்கள், ஈர்க்கும் இடங்கள் - என்னென்ன பார்க்கலாம்?
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது. ம் இத்தனை ஆண்டுகளாக இந்த இடத்தின் மதிப்பைத் தெரியாமல் இருந்து இருக்கிறோமே என்றும் தோன்றுகிறது. அங்கு போனால் ஒரு முறையாவது சென்று சிறப்பான இடங்களை பார்த்து விடுங்கள்..
ஸ்ரீவில்லிப்புத்தூர்
பால்கோவா என்று கூறியதுமே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிப்புத்தூர் தான். தமிழக அரசின் இலச்சினையே திருவில்லிப்புத்தூர் கோபுரம் தான். காதலின் தனித்துவமான தூய வடிவம் கண்ணனின் காதலி ஆண்டாள் பிறந்த மண். 12 அடுக்குகளை கொண்டு 192 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான ராஜகோபுரம் ஒரு நிமிடம் நம்மை உறையச் செய்கிறது.
அய்யனார் அருவி
அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் அழகின் உச்சம் தான் அய்யனார் அருவி. இங்குள்ள அய்யனார் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இந்தப் பேரழகை ரசித்து வர விருதுநகரிலிருந்து 12 கி.மீ. பயணிக்க வேண்டும்.
இருக்கன்குடி
சாத்தூருக்கு கிழக்கில் அர்ஜீன நதியும், வைப்பாறும் சங்கமிக்கும் இருக்கன்குடியில் புகழ்மிக்க மாரியம்மன் கோயில் உள்ளது. ஆறுகளின் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு 21 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையானது. இருக்கன்குடிக்குப் போகாமல் இருக்காதீர்கள்.
காமராஜர் இல்லம்
காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் படிப்புக்குப் பசி தடையாகிவிடக் கூடாது என்பதற்காக, முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்திய படிக்காத மேதை. அவரது கைக்கடிகாரம், ஆடைகள் மற்றும் பயன்படுத்திய சிலபொருள்களும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம்
அர்ஜீனா நதியின் கிளை ஆறான கௌசிக மகா நதியின் குறுக்கே குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பயணிகளின் மகிழ்ச்சிக்காகப் படகுவசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பலவகையான நீர்ப்பறவைகள் வலசை வருகின்றன.
குகன்பாறை
சிற்றூரின் மேற்கே உள்ள சிறிய மலைக்குன்றாகக் குகன்பாறை உள்ளதால், அப்பெயரிலேயே இந்தக் கிராமமும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த குகை சமணத் துறவிகளின் பள்ளியாகப் பயன்படுத்தப்பட்டது. வேம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையில் குகன்பாறை அமைந்துள்ளது.
செண்பக தோப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலையில் செண்பக தோப்பு அமைந்துள்ளது. இந்த தோப்பு அழகிய இயற்கை எழிலுடன் காணப்படும் ஒரு இடமாக உள்ளது. இங்கு ஓடை, அருவி என இயற்கையினை அவ்வளவு அழகாக வருணிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. அங்கு சென்றால் மறக்காமல் செண்பக தோப்பிற்கு சென்று வாருங்கள்.