திருச்சியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள் - அங்கு போனா பார்க்காமல் மிஸ் பண்ணிடாதீங்க..!
காவேரி ஆற்றில் கரையில் அமைந்துள்ள தமிழகத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான திருச்சியில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மலைக்கோட்டை கோவில்
திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டை கோவில் ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டையாகும்.
இந்த கோட்டையின் அதாவது மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது. வருடம் தோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியின் போது அதிக எடை கொண்ட கொழுக்கட்டையை படையலிட்டு வருகின்றனர். இந்த மலைக்கோட்டையில் இருந்து பார்த்தால் திருச்சி மாநகரமே காட்சியளிக்கும்.
நத்தர்ஷா தர்கா
இஸ்லாமியர்கள் முக்கிய வழிபாடு தலமாக இருந்து வருகிறது திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நத்தர்ஷா தர்கா.
இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிட பயண நேரத்தில் சென்றடையலாம். இந்த தர்காவில் ஆண்டு தோறும் ரம்ஜான் மாதத்தில் உருஸ் நடைபெறும் அதில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வேறு மாநிலங்களில் இருந்து பலரும் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீரங்கம் கோவில்
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவில் இது திருச்சி மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது.
விண்ணை நோக்கிய அழகிய கோபுரங்கள் சுற்றுலா வருவோரை கவர்ந்து வருகிறது. 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
வண்ணத்துப்பூச்சி பூங்கா
திருச்சி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் இங்கு அமைந்துள்ளது தான் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் சுமார் 8.00 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவ மாணவியர், குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் வந்து செல்கின்றனர்.
கல்லணை
திருச்சியில் மிகவும் பழமை வாய்ந்த அணை கல்லணை. இது காவேரி மீது கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவேரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது.
முக்கொம்பு மேலணை
திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிகப் பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்று கர்நாடகாவில் இருந்து வரும் காவேரி இவ்விடத்தில் மூன்றாக பிரிந்து மூன்று முனையில் செல்வதால் முக்கொம்பு என பெயர் வந்தது.
திருச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது இந்த முக்கொம்பு மேலணை. கர்நாடகாவில் தலைகாவேரியாக அகண்ட ஒற்றை ஆறாக வரும் காவேரி இங்கு மூன்று ஆறுகளாக பிரிந்து செல்லும் இடமாக இருப்பதால் முக்கொம்பு ஒரு அழகான சுற்றுலா தளமாக விளங்குகிறது.
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி
புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி புளியஞ்சோலை தமிழ்நாட்டின், கிழக்கு தொடர்ச்சி மலை கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இது திருச்சியில் இருந்து சுமார் 72 கி.மீ துாரத்தில் அமைந்துள்ளது. இது துறையூரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பச்சமலை
துறையூர் அருகே அமைந்துள்ள ஒரு பசுமையான மலைத்தொடர் தான் இந்த பச்சமலை. இயற்கை எழில் கொஞ்சும் மிக சிறந்த இடமாகும்.
இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.