துறைமுக நகரம் தூத்துக்குடி - வாய்க்கு ருசியா சாப்பிட இந்த இடங்களுக்கு போங்க!
தூத்துக்குடி
தமிழகத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் தூத்துக்குடி. இம்மாவட்டம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும், மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது.
தூத்துக்குடி கடல் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. மேலும், பூங்காக்களுக்கும் பேர் போனது. அதேபோல் தூத்துக்குடி துறைமுகம் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
இதனால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இம்மாவட்டத்திற்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடிக்கு சுற்றுலா செல்வோருக்கு சாப்பிடச் சிறந்த இடங்கள் குறித்து பார்ப்போம்.
மாடிக்கடை
நீங்கள் பழமை வாய்ந்த ஒரு இடத்தில் மதிய உணவு சாப்பிட ஆசைப்பட்டால் மாடிக்கடைக்கு செல்லலாம். இங்கு பழமை மாறாமல் உணவுகள் விறகு அடுப்பில் சமைக்கப்படுகிறது. இதனால் ஏராளமானோர் தினமும் வருகை தருகின்றனர். இங்கு வாய்க்கு ருசியாக கூட்டு, பொரியல், சாம்பார், ரசம் என சுவையுடன் கூடிய மதிய உணவு பரிமாறப்படுகிறது.
இந்த உணவகத்தில் கிடைக்கும் மட்டன் சுக்கா பலரையும் வெகுவாக ஈர்க்கிறது. மேலும், இங்கு பில் கூட பழமையான முறையில் ஸ்லேட்டில் எழுதி தான் கணக்கிடப்படுகிறது. ஒரு பழமை வாய்ந்த இடத்தில் சிறிய ஸ்பீக்கரில் பழைய பாடல்களை கேட்டபடி நண்பர்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட மாடிக்கடைக்கு செல்லலாம்.
ஆண்டவர் நைட் கிளப்
தூத்துக்குடி என்றாலே பொரிச்ச பரோட்டா மிகவும் பிரபலமாக உள்ளது. ஒரு சிறந்த பொரிச்ச பரோட்டாவை நீங்கள் சாப்பிட விரும்பினால் ஆண்டவர் நை கிளப்பிற்கு செல்லலாம். இங்கு பரோட்டாவை எண்ணெயில் பொரிச்சு எடுத்து அதனை ஒரு மரக்கட்டையால் அடித்து நொறுக்கி, அதில் 4 வகையான சால்னாக்களை ஊற்றிக் கொடுப்பார்கள்.
உங்கள் நண்பர்களுடன் ஒரு சிறந்த பொரிச்ச பரோட்டாவை ருசிக்க இங்கு செல்லலாம். மேலும், இந்த உணவகத்தில் உங்களுக்கு பிரியாணி, சுக்கா, நாட்டுக்கோழி, புறா, முட்டை பரோட்டா, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து உள்ளிட்ட உணவுகளும் இங்கு கிடைக்கும். இந்த உணவகம் போல்பேட்டை கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
ஓலை புட்டு
தூத்துக்குடியில் இலங்கைத் தமிழர்களின் ‘ஓலை புட்டு’ என்ற உணவகம் செயல்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை ருசிக்க விரும்பினால் நீங்கள் இங்கு செல்லலாம்.
இந்த உணவகத்தில் மதிய உணவாக சாதம், மீன், இறால், கனவா மீன் மசாலா, நண்டு, காய்கறி, கீரைக்கூட்டு, சுண்டல், மாசி சாம்பல் எனப்படும் இலங்கை உணவு ஆகியவை கிடைக்கின்றன.
மேலும், இரவில் இடியாப்பம், புட்டு, பரோட்டா ஆகியவை கிடைக்கும். அத்துடன் தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் சொதியும், கோழிக்கறி ஆகியவையும் தருகின்றனர். குறிப்பாக ஓலை புட்டு எனப்படும் இலங்கை உணவும் பனை ஓலைகளில் வழங்கப்படுகிறது. இந்த உணவகம் தூத்துக்குடி செயின்ட் பேட்ரிக் தேவாலயத்தை ஒட்டி அமைந்துள்ளது.
அரேபியன் ரெஸ்டாரண்ட்
நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு பஃபே ஸ்டைலில் மதிய உணவு சாப்பிட விரும்பினால் என்றால் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். இந்த பஃபே, திங்கள் முத்தம் வெள்ளி வரை மதியம் 12.30 மணி முதல் 3.45 மணி வரை மட்டுமே செயல்படும்.
அதில், பெப்பர் சிக்கன் சூப், கோபி 65, சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, வைட் ரைஸ், நான், சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, ரசம், தயிர், குலாப் ஜாமூன், ஐஸ் க்ரீம் மற்றும் மின்ட் லைம் உள்ளிட்டவை வெறும் ரூ. 449-க்கு நீங்கள் ருசிக்கலாம். இந்த உணவகம் சண்முகாபுரம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
தமிழ் வீட்டுமுறை உணவகம்
இந்த உணவகத்தின் சுற்றுப்புறச் சூழல் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. சுவரில் இருக்கும் ஓவியங்கள் மற்றும் உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடில் போன்ற அமைப்புகள் சிறப்பாகவே இருக்கும்.
இங்கு இட்லி, தோசை, பரோட்டா முதல் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் சாப்பாடு உள்ளிட்ட வகைவகையான உணவுகள் உள்ளது. மேலும், குடல் பிரை, சிக்கன் சுக்கா, பூண்டு சிக்கன், நாட்டுக்கோழி சாப்ஸ், இறால் தொக்கு, இறால் 65 என பார்த்ததும் சாப்பிடத்தூண்டும் உணவுகளும் கிடைக்கின்றன. இந்த உணவகம் தூத்துக்குடி டூவிபுரம் 4-வது தெருவில் அமைந்துள்ளது.