நாக்குக்கு ருசியா தஞ்சாவூர் செட்டிநாடு சமையல் - இந்த இடங்களை மிஸ் பண்ணீடாதீங்க!
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ருசியாக சாப்பிட சிறந்த இடங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழர்களின் தொண்மையை பறைசாற்றும் கலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், உணவு ஆகியவை நிறைந்த இந்த சோழநாட்டின் புகழ் இன்றளவிலும் ஓங்கி நிற்கின்றது. காலத்தால் அழியாத தமிழர்களின் பாரம்பரியத்தை உரைத்து கூறும் சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் கோவில் இங்கு வீற்றிருக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகரத்தில் விருந்தோம்பலும், உணவும் ஒரு முக்கிய அங்கமாகும். அந்த வகையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில், மண் மனம் மாறாத செட்டிநாடு உணவு வகைகள் மற்றும் தமிழ் பிராமண உணவுகளை ருசிக்க சில சிறந்த இடங்களை குறித்து காணலாம்.
சைவ உணவுகள்
சைவ உணவு சாப்பிட விரும்புவர்களுக்கு தஞ்சாவூர் பாணி உணவு ஒரு சரியான விருந்தாகும். இங்கு பெரும்பாலும் அரிசி மற்றும் அரிசி கலந்த உணவு வகைகள் தான் அதிகம். அந்த வகையில், தஞ்சாவூர் ராஜகிரிஷ்ணபுரம், ஜவுளி செட்டி தெருவில் அமைந்திருக்கும் மிக பிரபல ஐயங்கார் உணவகம் தான் இந்த ஸ்ரீ லெஷ்மி மெஸ்.
40 வருடம் பழமை வாய்ந்த இந்த கடையில் கூட்டு, பொரியல், வறுவல், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் மோர் என வீடு சாப்பாடு சுவையில் சைவ மீல்ஸ் இங்கு கிடைக்கும். அதேபோல இனாதுக்கான்பட்டி சிவ கங்கா கார்னரில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி மெஸ் உணவகத்தில் சிறந்த சுவையில் சைவ உணவுகள் கிடைக்கின்றது.
50 வருடம் பழமையான இந்த உணவகத்தில், காரசாரமான செட்டிநாடு சைவ சாப்பாடு பலரால் விரும்பி சாப்பிடப்படுகிறது. அடுத்ததாக தஞ்சாவூர் ஸ்பெஷல் இடியாப்பம் கடப்பாவை ருசித்து சாப்பிட பெரிய கோவில் அருகில் அமைந்துள்ள ஹோட்டல் காபி மெஸ் உணவகத்தில் மறக்காமல் சாப்பிட்டு பாருங்கள்.
காபி பிரியர்கள் அங்கு கிடைக்கும் அவர்களது ஸ்பெஷல் பில்டர் காபியை கண்டிப்பாக ருசித்து விடுங்கள். குடும்பத்தோடு ஒரு நல்ல ஆரோக்கியமான கிராமத்து மண்பானை சமையல் சாப்பிட தஞ்சாவூர் கணாதிபதி நகரில் அமைந்துள்ள செல்லம்மாள் கிராமத்து சமையல் உணவகத்தை மறக்காமல் சாப்பிட்டு பாருங்கள்.
இங்கு பாரம்பரிய சுவையில், விதவிதமான வகையில் நேர்த்தியான ஒரு வாழை இலை சாப்பாடு விருந்து அளிக்கப்படுகிறது. மலிவு விலையில் தென்னிந்தியா உணவுககளையும் நல்ல அனுபவத்தைகளையும் கொடுப்பதில் இந்த மெஸ் சிறந்து விளங்குகிறது.
அசைவ உணவு
செட்டிநாடு உணவு என்றாலே அதன் செழுமையான, காரமான மற்றும் தனித்துவமான சுவைக்கு தென்னிந்தியாவில் பலர் அடிமை. உமிழ் நீர் சுரக்கும் நாட்டுக்கோழி கொழம்பு, ஆட்டுக்காரி கொழம்பு, இறால் மசாலா மற்றும் பிற செட்டிநாடு உணவுகளின் சுவை கட்டி இழுக்கும்.
செட்டிநாட்டு சமையலறையில் உருவான பல உணவு வகைகள் பிரபலமான ஒன்றாக மாறியது. அந்த வகையில், தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் அமைந்திருக்கும் தேவர்ஸ் பிரியாணி மிகவும் பிரபலாமான ஹோட்டலாகும். 60 வருட பழமையான இந்த உணவகத்தில் பிரியாணி, மீன் வறுவல் ரொம்பவே ஸ்பெஷல்.
இது மட்டுமல்லாமல் ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அங்கு கிடக்கும் மட்டன் 88 ஐ சாப்பிட்டு பாருங்கள். அடுத்ததாக நேர்த்தியான சுவையில் இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா சாப்பிட தஞ்சாவூர் எலிசா நகரில் உள்ள நாசர் இடியாப்ப உணவகத்தில் சுவைத்து பார்க்கலாம்.இங்கு, பாயா மட்டுமல்லாமல் காடை தலைக்கறி,
தந்தூரி சிக்கன், மட்டன் கொத்து பரோட்டா, மற்றும் அசைவ மீல்ஸ் ஆகியவை சாப்பிடலாம். இரவு உணவுக்கு குடுமபத்துடன் ஒரு நல்ல சூழல் அமைத்து தரக்கூடிய உணவகத்தை தேடுகிறீர்கள் என்றால் தஞ்சை தம்பி விலாஸ் ஒரு உகந்த ஒன்றாக இருக்கும். இங்கு பொட்டலம் மட்டன் பிரியாணி, சிக்கன் உப்பு கறி, கறி தோசை, சுக்கா, மிளகு வறுவல் என விதவிதமான அசைவங்கள் கிடைக்கிறது.
ஸ்னாக்ஸ்
நாள் முழுவதும் தஞ்சையின் அழகையம், கலைநயத்தையும் பார்த்து ரசித்துவிட்டு களைப்பில் இருப்பவர்களுக்கு இங்கு ஏராளமான நொறுக்க தீனி கடைகள் உள்ளது. அந்த வகையில் வெயிலுக்கு இதமான சர்பத் கிடைக்க தஞ்சை ராஜகிரிஷ்ணபுரம், அண்ணா சாலையில் இருக்கும் குணங்குடி தாசன் சர்பத் கடை மிகவும் பிரபலம்.
இவர்களிடம் பால் சர்பத், ரோஸ் சர்பத், அண்ணாச்சி பால் சர்பத் போன்ற பல விதமான சர்பத்கள் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் தனித்துவமான சுவைக்கு தஞ்சை மக்கள் அடிமை என்றே சொல்லலாம். மாலை நேரத்தில் கமகமக்கும் காபி குடிக்க தஞ்சாவூர் காசு கடையில் ருசித்து பார்க்கலாம்.
மலிவான விலையில் நல்ல உணவுகள் இங்கு கிடைக்கின்றது. அடுத்ததாக தஞ்சாவூர் பர்மா காலனியில், சுவையான பர்மீஸ் உணவுகள் கிடைக்கும். kowsa எனப்படும் அதோ உணவை ருசிக்க அங்குள்ள கடைளில் சாப்பிட்டு பார்க்கலாம்.
வாழைத்தண்டு சூப், மொஹிங்கா, பேஜு என்ற அனைத்து விதமான பர்மீஸ் உணவுகளும் இங்கு காரசாரமான சுவையில் கிடைக்கும்.