ராமநாதபுரம் போறீங்களா? வாய்க்கு ருசியா சாப்பிட இதை நோட் பண்ணுங்க!
புராணங்கள் வாழும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகை காண இரு கண்கள் போதாது. கடற்கரைகள் மற்றும் புனித தீவுகளால் சூழப்பட்டுஇருக்கும் எழில் மிகுந்த பல இடங்களை காணவே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் படையெடுக்கின்றனர்.
மேலும் இராமாயணம் பிறந்த இந்த ஊரில் அமைந்திருக்கும் ஒவ்வொரு புகழ்பெற்ற புனித ஸ்தலங்களுக்கு பின்னால் உள்ள காவியங்களும் சகாப்தங்ளும் இன்றுவரை வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அதிகளவு மிளகாய் உற்பத்தி செய்யக்கூடிய மாவட்டம் என்றால் அது ராமநாதபுரம் தான்.
அப்படிபட்ட இந்த ஊரில் காரசாரமான சுவை கொண்ட உணவுகளுக்கு பஞ்சமே இல்லை. எனவே இந்த மாவட்டத்தில் எங்கு சென்றால் ருசிகர உணவை சாப்பிடலாம் என்று இந்த பதிவில் காணலாம்.
அசைவ உணவுகள்
ராமநாடு முழுக்க எங்கு திரும்பினாலும் அசைவ உணவுகள் மண்டி கிடைக்கும். நேர்த்தியான சுவையில் அனைத்துவிதமான அசைவ விருந்தையும் ருசிக்க ராமநாடு பெயர்போனது. அந்த வகையில் சாலை பஜார், வேலிபட்டினத்தில் உள்ள பிரபல ஜெகன் தியேட்டருக்கு எதிரே இந்த சீப் அண்ட் பெஸ்ட் ஹோட்டல் அமைந்துள்ளது.
இங்கு கிரில் சிக்கன், மெஜிரா சிக்கன், ஓட்ஸ் சிக்கன், ஆகிய சிக்கன் வகைகள் பலரது விருப்ப உணவாகும். இதை தவிர மற்ற உணவு வகைகளும் அங்கு தரமான சுவையில் கிடைக்கும். அடுத்ததாக ராமநாடு நியூ பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள கிடா கறி உணவகத்தில் பல்வேறு வகை உணவுகளும் கிடைக்கும்.
அதாவது சைனீஸ், பஞ்சாபி,சவுத் இந்தியன், நார்த் இந்தியன்,ஆஃப்கானி என விதவிதமான உணவுகள் உள்ளது. குறிப்பாக கிடா கறி தோசை இங்கு மிகவும் ஸ்பெஷல். அடுத்து, ராமநாடு ecr ரோட்டில் ஏராளமான ரோட்டு கடைகள் இருக்கும் பெரும்பாலும் பரோட்டா குடல் கறி,பேமஸ் ding dong ஆம்லெட் ஆகிய உணவுகள் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள செட்டி ஹோட்டலில் கிடைக்கும் ரூ.15 பரோட்டாவும் காரசாரமான சால்னா மிகவும் பிரபலம் காலை 8 மணிக்கே இங்கு பரோட்டா கிடைக்கும். மேலும் மீனவர்கள் அதிகம் வாழும் இந்த ஊரில் மீன் உணவு சாப்பிடாமல் இருக்க முடியாது. அந்த வகையில், ஓம் சக்தி நகரில் அமைந்து உள்ள கிராப்ட் கிட்சேன் உணவகத்தில் உடலுக்கு சத்து தரும் உளுந்து களி, மீன் ஆணம் விற்பனை செய்யப்படுகிறது.
சைவ உணவுகள்
அசைவ உணவகங்களுக்கு போட்டியாக சைவ உணவுகளின் சுவையை மிஞ்சுவதிலும் ராமநாடு பெயர்போனது. அப்படியாக சக்கரக்கோட்டை, பாரதி நகரில் அமைந்துள்ள பீமாஸ் நலபாகம் ராமநாட்டின் பிரபல சைவ உணவகமாக திகழ்கிறது. இங்கு சிறந்த சுவையில், தகுந்த விலையில் அனைத்து வகை உணவுகளையும் சுவைக்கலாம்.
இட்லி, தோசை,பூரி,பொங்கல்,சோலா பூரி,காளான் பிரியாணி, மீல்ஸ் என ரகரகமாய் உள்ளது. இங்கு ஸ்பெஷல் என்றால் அவர்களது நெய் ரோஸ்ட தோசை தான். அடுத்ததாக ஹோட்டல் ஸ்ரீ சரவண பவன், ராமேஸ்வர கோயில் அருகில் அமைந்துள்ளது.
இங்கேயும் அனைத்து விதமான சைவ உணவுகளும் கிடைக்கும், உணவின் சுவை, தரம் மற்றும் சேவைகள் சிறப்பாக இருக்கும் என கூறுகின்றனர். நல்ல வீட்டு உணவு மத்திய வேளையில் சாப்பிட நினைத்தால், நார்த் கார் சாலையில் உள்ள ஸ்ரீ முருகன் மெஸ்ஸுக்கு நிச்சயம் செல்லலாம்.
தரமான சுவையில் மலிவான விலையில், அன்லிமிடெட் சைவ மீல்ஸ் வெறும் ரூ.100 க்கு வழங்கப்படுகிறது, அதுமட்டுமல்லாமல் எல்லாம் டிபன் வகைகளும் 50 ரூபாய்க்குள் வயிறு நிறைய சாப்பிட்டு வரலாம்.
மாலை நேர ஸ்னாக்ஸ்
ராமநாடு முழுக்க ஏராளமான சுற்றுலா தளங்கள் நிறைந்துள்ளது. அதனை வெகுவாக பார்த்து ரசித்துவிட்டு கலைப்பாகி மாலை வேளையில் பசியோடு இருப்பவர்களுக்கு வித்தியாசமாகவும், வகைவகையாகவும் ஸ்னாக்ஸ் கிடைக்கும்.
அந்த வகையில், சாலை பஜாரில் அமைந்துள்ள பெஸ்ட் மம்மி கடையில் ருசிகரமான பேக்கரி உணவுகள்,நொறுக்கு தீனிகள், தேநீர் இங்கு கிடைக்கும். கேக், சிறுபருப்பு ஹல்வா,கோதுமை ஹல்வா,தொதல் மலாய் போலி என பல வித உணவுகளை ஒரே இடத்தில் ருசிக்க முடியும்.
காந்தி நகரில் உள்ள மிக பிரபல சர்பத் கடை என்றால் அது காதரிய சர்பத் கடை தான். நன்னாரி பால் சர்பத்,நன்னாரி ரோஸ் சர்பத் போன்ற 7 வகையான சாப்ட் டானிக் சர்பத்கள் குளுகுளுவென விற்கப்படுகிறது. அடுத்ததாக, கேணிக்கரையில் அமைந்துள்ள பாலன் உணவகம் அருகில் உள்ள ஒரு சின்ன பெட்டிக்கடை மாலை நேர பசிக்கு ஒரு உகந்த கடை என்றே சொல்லலாம்.
அந்த ஆவின் பெட்டிக்கடையில் பால் பணியாரம், வாழை பூ வடை, வாழை தண்டு பஜ்ஜி,காளான் சமோசா,ஸ்பெஷல் மாப்பிளை டீ, லெமன் அண்டு மின்ட் டீ,மிளகு பால் பாதம் டீ, பிஸ்தா டீ,அமுக்குரா கிழங்கு டீ உள்ளிட்ட 36 வகை டீ இங்கு கிடைக்கும்.