தங்கச்செயினை விழுங்கிய திருடன் - வாழைப்பழம் கொடுத்து மீட்ட போலீசார்
பெங்களூருவில் விழுங்கிய தங்கச்செயினை திருடனிடமிருந்து போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி மார்க்கெட்டின் எம்.டி.வீதியில் வசிக்கும் ஹேமா என்பவர், நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் ஹேமா கழுத்திலிருந்த தங்கச்செயினை பறிக்க முயற்சித்துள்ளனர். ஹேமா விடாப்பிடியாக நடந்த போராட்டத்தில் 3 பேரில் ஒருவன் 70 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளான்.
சுதாரித்த ஹேமா கூச்சலிட 3 பேரில் ஒரு திருடனை அப்பகுதி மக்கள் பிடித்து கேஆர் மார்க்கெட் காவல் நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவரிடமிருந்து சங்கிலியை மீட்டெடுக்க முடியவில்லை. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் விஜய் என்பதும், பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்ததும் தெரிய வந்தது.
காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட திருடனுடன் சென்ற போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆம். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே, ஸ்கேனிங் எடுத்தபோது விஜய்யின் வயிற்றில் தங்கச்செயின் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் இனிமா மற்றும் வாழைப்பழம் கொடுக்கப்பட்டு மலம் வழியாக தங்கச்செயின் மீட்கப்பட்டது. இதனையடுத்து விஜய்யை கைது செய்த போலீசார் மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.