பொதுக்கழிவறைகளின் கட்டணம் 2 மடங்கு உயர்வு - தண்ணீர் பஞ்சத்தால் கண்ணீர் விடும் மக்கள்!
பொதுக்கழிவறைகளின் பயன்பாட்டுக் கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தண்ணீர் பஞ்சம்
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு பேப்பர் பிளேட், கப் போன்றவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டேங்கர் லாரி நீரின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. 80 சதவீத ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. வாகனம் கழுவுதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு குடிநீரைப் பயன்படுத்துவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் உயர்வு
இந்நிலையில், பொதுக் கழிவறைகளில் சிறுநீர் கழிக்க 2 ரூபாயும், மலம் கழிக்க 5 ரூபாயும் வசூலித்து வந்தனர். ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 5 ரூபாய் கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கழிவறைப் பயன்படுத்துவோருக்கு சிறு குடங்களில் தண்ணீர் வழங்கப்படுவதாகவும், கூடுதல் தண்ணீருக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், பொதுக் கழிவறைகள் துர்நாற்றமாகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில கழிவறைகளில் குளிக்கும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மெஜஸ்டிக்கில் பொது கழிப்பறை நடத்தி வரும் ஒருவர் கூறுகையில்,
“எங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று டேங்கர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒவ்வொரு டேங்கரின் விலையும் ரூ.5,000. இதனால் எங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வருமானத்தில் பெரும்பகுதி தண்ணீர் செலவை ஈடுகட்ட வேண்டியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.