மது குடித்த செக்யூரிட்டியை தட்டிக்கேட்ட குடியிருப்புவாசி கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி
வேலை நேரத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர், குடியிருப்பு காவலாளியால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளராக இருந்தவர் பாஸ்கர் ரெட்டி. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தவர் பசந்த். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 10) காவலாள் பசந்த் வேலை நேரத்தில் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டு உரிமையாளரான பாஸ்கர் ரெட்டி இதனை பார்த்து, பணி நேரத்தில் இப்படி மது குடிக்கக் கூடாது என கண்டித்துள்ளார். மேலும் காவலாளி பசந்த் பல முறை சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வேலை நேரத்தில் மது குடித்து வந்ததால் குடியிருப்பு நலச் சங்கத்தில் பசந்தின் நடவடிக்கை குறித்து புகார் அளித்துள்ளார்.
இது மது போதையில் இருந்த காவலாளி பசந்த்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதனையடுத்து நேற்று பாஸ்கர் ரெட்டி குடியிருப்பு வளாகத்தில் வழக்கமான நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காவலாளி பசந்த் அங்கு வந்து பாஸ்கர் ரெட்டியை எதிர்பாராதவிதமாக தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தையும் அறுத்துள்ளார்.
பாஸ்கர் ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து பாஸ்கர் ரெட்டியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலாளி பசந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.