பாலியல் புகார் அளித்த சிறுமி - மீண்டும் வன்கொடுமை செய்த காவலர்
பாலியல் புகார் அளித்த சிறுமியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொம்மனஹள்ளி(bommanahalli) பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமியை, 30 வயதான விக்கி என்ற நபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஒருகட்டத்தில் சிறுமி இது குறித்து தாயிடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அவரை அழைத்து கொண்டு பொம்மனஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் விக்கி கைது செய்யப்பட்டார்.
காவலர் செய்த கொடூரம்
அங்கு காவலராக பணியாற்றி வந்த அருண் தோனேபா என்பவர், சிறுமிக்கு நீதி பெற்று தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து, வழக்கு விசாரணை என கூறி சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்த அவர், தூக்க மாத்திரைகள் கலந்த மதுவை கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை வீடியோவாகவும் பதிவு செய்த அவர், இதை பற்றி வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலடைந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாயார், பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் அருண் தோனேபா மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவான அருண் தோனேபா காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.