பெங்களூர் விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
பெங்களூர் விமான நிலையத்தில் போலீசாரால் பல லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் தங்ககட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த விமானத்தில் வந்த பயணிகளை போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். ஆனால் பயணிகளிடம் இருந்து தங்ககட்டிகள் எதுவும் சிக்கவில்லை.
இதனால் பயணிகளை அனுப்பி வைத்து விட்டு விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு இருக்கையில் கிடந்த கால்பந்தை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 223 கிராம் எடை கொண்ட 2 தங்கக்கட்டிகள் இருந்தன. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி அறிந்ததும் தங்ககட்டியை கடத்தி வந்தவர் அதை விமானத்தில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.