யூரோ கோப்பை கால்பந்து: காலிறுதியில் இத்தாலி-பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலி-பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகின்றன.
16-ஆவது யூரோ கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியன் பிரான்ஸ், நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், 3 முறை சாம்பியனான ஜெர்மனி ஆகிய அணிகள் 2-வது சுற்றுடன் வெளியேறின.
இந்நிலையில் இன்று இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறும் முதலாவது போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது.இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 16-ல் ஸ்பெயினும், ஒன்றில் சுவிட்சர்லாந்தும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 5 ஆட்டம் டிரா ஆகியுள்ளது.
நள்ளிரவு 12.30 மணிக்கு முனிச் நகரில் நடக்கும் மற்றொரு போட்டியில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம், 4 முறை உலக சாம்பியனான இத்தாலியை எதிர்கொள்கிறது. இதில் இத்தாலி அணி கடைசி 31 சர்வதேச போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் உள்ளது. இவ்விரு அணிகளும் 22 முறை இதற்கு முன்பு மோதியுள்ளன. இதில் 4-ல் பெல்ஜியமும், 14-ல் இத்தாலியும் வெற்றி பெற்ற நிலையில், 4 ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.