பாலியல் தொழிலாளர்களுக்கு பென்ஷன், சிக் லீவ் - எங்கு தெரியுமா?
பாலியல் தொழிலாளர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாலியல் தொழில்
பாலியல் தொழில் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கு பொதுவெளியில் வைத்து மரண தண்டனை வழங்கும் நாடுகளும் கூட உள்ளன.
ஆனால் சில நாடுகளில் பாலியல் தொழில்களுக்கு அனுமதி உள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு பாலியல் தொழில்களை குற்றமற்றதாக மாற்றிய முதல் நாடாக நியூசிலாந்து மாறியது.
சட்டபூர்வ உரிமைகள்
ஆனால் இதற்கு ஒரு படி மேலாக பாலியல் தொழிலார்களுக்கு பென்ஷன், ஹெல்த் இன்சூரன்ஸ் மகப்பேறு விடுப்பு, என மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அதே உரிமைகள் வழங்கப்படும் என பெல்ஜியம் அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பாலியல் தொழில் மீதான தடையை நீக்கி குற்றமற்றதாக அறிவித்தது பெல்ஜியம். இதனையடுத்து கடந்த மே மாதம் பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வந்து பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது.
மேலும், பாலியல் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் முறித்துக் கொள்ளும் உரிமையும், வாடிக்கையாளரை மறுக்கும் உரிமையும், வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் உரிமையையும் இந்த சட்டம் வழங்குகிறது. அறைகளில் எச்சரிக்கை சுவிட்ச்களை பொருத்த வேண்டும் என்றும் இந்த சட்டம் அறிவுறுத்துகிறது.
ஆதரவும் எதிர்ப்பும்
இந்த சட்டம் பாலியல் தொழிலாளர்களை பாதுகாப்பானவர்களாக மாற்றுகிறது என பெல்ஜியம் பாலியல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் விக்டோரியா தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளும் இந்த சிறந்த முன்னெடுப்பை நோக்கி நகர வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் எரின் கில்பிரைட் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சிக்கல் காரணமாக கர்ப்பமாக இருந்த போதும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டி இருந்தது. பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை கூட என்னால் விடுப்பு எடுக்க முடியவில்லை. எந்த சட்டம் எங்களுக்கு ஓரளவுக்கு உதவும் என பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் பாலியல் தொழிலே பெண்கள் மீதான சுரண்டல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அங்கு 30,000 பேர் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.