இனி வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை!
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை : விரைவில் புதிய சட்டம் அமல்...!!
வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் என்பதற்கான புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாரத்தில் 4 நாட்களில் 38 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்களில் குடும்பத்தினருடன் செலவிடலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த சட்டம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இந்த ஆண்டு மத்தியில் அமலுக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
இது போன்று கொரோனா பெருந்தொற்று நோயின் காரணமாக இந்தியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தியபோதே ‘இனி வேலை நேரம் 12 நேரமாக அதிகரிக்கக்கூடும்’ என்ற பேச்சு இருந்து வந்தது.
இந்நிலையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா கூறியிருந்தார்.
இதனால் முதலாளிகளுக்கும் நிறுவனத்திற்கும் நிர்பந்தம் இருக்காது. தற்போது நடைமுறையில் உள்ளதுபோல வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அது அப்படியே தொடர்கிறது. ஆனால் வேலை நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை என்றால் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்.
அதுவே 10 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 5 நாட்களும், 8 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யவேண்டி இருக்கும்.
இதற்கு முன்னதாக, ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைப் போன்றே புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.