ஆர்வத்தை தூண்டிய புயலின் பெயர் ... அசானி என பெயர் வந்தது ஏன் தெரியுமா? -
வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் புயலின் பெயர் பலரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்ற நிலையில், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவில் தீவிரம் அடைந்தது. இந்த புயலுக்கு ‘அசானி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
அசானி புயல் நாளை (மே10) மாலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலைக் கொண்டு, அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று (மே9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டது ஏன் என்ற கேள்வி பலரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. பொதுவாக வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு வடஇந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 13 நாடுகள் பெயர் சூட்டுகின்றன. அந்த வகையில் நமது அண்டை நாடான இலங்கைதான் இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது. இந்த சிங்கள மொழி சொல்லுக்கு ‘சீற்றம்’ என்பது தான் பொருள். ‘அசானி’க்கு அடுத்தபடியாக உருவாகும் புயலுக்கு சூட்டவிருக்கும் பெயர் ‘சித்ரங்’ என்பதாகும் . இந்த பெயரை வழங்கியிருக்கும் நாடு தாய்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.