சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் - போலீசார் அதிர்ச்சி
கன்னியாகுமரியில் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு ஆட்டோவில் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரரின் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், உணவு சரியாக கிடைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் தங்கியிருந்த 3 பிச்சைக்காரர்களை நாகர்கோவில் கட்டுப்பாட்டு அறை போலீசார் மீட்டனர்.
அவர்களை பரிசோதனை செய்தபோது மூன்று பேரில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (50) என்பது தெரியவந்தது. அவரிடம் பிச்சையெடுத்து சேமித்த பணம் ரூ.3,500-ம் சுமார் ஒரு அடி நீளமுள்ள கத்தி ஒன்றும் இருந்தது.
பிச்சைக்காரரிடம் கத்தி இருந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் மற்றொரு பிச்சைக்காரர் சொந்த வீடு வைத்திருப்பதும், வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு தற்போது பிச்சை எடுப்பதையும் அறிந்து போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.