பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி; வாந்தி எடுத்தால் அவுட் - போஸ்டர் வெளியிட்ட நபர் கைது!
பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்படுவதாக போஸ்டர் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
பீர் குடிக்கும் போட்டி
கடந்த நாட்களுக்கு முன்னர் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் 'தை பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி" நடைபெறும் என்றும், வாந்தி எடுத்தால் ஆட்டத்திலிருந்து நீக்கப்படும்" போன்ற விதிமுறைகளும் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டரை பார்த்த பலரும் உயிருக்கு ஆபத்தான இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று பதிவிட்டனர்.
மேலும், புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற போட்டி சமுதாய சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
கைது
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய வாண்டான் விடுதியை சேர்ந்த கணேசமூர்த்தி (38) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி விளையாட்டாக இந்த போஸ்டரை 6 பேர்கள் மட்டுமே உள்ள வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்தேன்.
அதை யாரோ சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டனர். இது போல எந்த போட்டியும் நடத்தவில்லை. நடத்தவும் மாட்டோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை சொந்த ஜாமினில் விடுவித்தனர்.