என்ன பீர் பஸ்ஸா.. அதுவும் சென்னை டூ புதுச்சேரியாம் - முழு விவரம் இதோ.!
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல, 'பீர் பஸ்' என்ற புதிய சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பீர் பஸ்
புதுச்சேரியை சேர்ந்த 'கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி' என்ற நிறுவனம், சென்னையில் இருந்து புதுச்சேரி செல்ல, 'பீர் பஸ்' என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வருகிற 22-ந் தேதி முதல் பீர் பஸ் இயக்கப்பட உள்ளது.
ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்த்து விட்டு அன்றைய தினமே சென்னைக்கு திரும்பி விடலாம். இதற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அனுமதி?
இதுகுறித்து நிறுவன ஏற்பாட்டாளர்கள், பீர் பஸ் என்று அழைப்பதால் பஸ்சில் குடிப்பது என்று யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதி இல்லை. எனவே புதுவையில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தப்படும். அந்த இடத்தில் பீர் அருந்த அனுமதிக்கப்படும்.
சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம். அன்றாட வேலைகளில் மூழ்கி கிடப்பவர்கள், வார விடுமுறையில் ரிலாக்சாக உற்சாகப்படுத்தி புதுப்பித்து கொள்ள இந்த சுற்றுலா உதவும் என்று தெரிவித்துள்ளனர்.