மாட்டிறைச்சி அதிகம் சாப்பிடுங்க - பா.ஜ.க. அமைச்சர்
மேகாலயாவில் பா.ஜ.க. அமைச்சர் ஒருவர் மாட்டிறைச்சி அதிகம் சாப்பிடுங்க என்று கூறியிருப்பது அந்த கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாக சர்ச்சைகள் நிலவுகின்றன. மேலும் பா.ஜ.க. மாநில அரசுகள் மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் பசு வதை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் மேகாலயாவில் பா.ஜ.க. அமைச்சர் ஒருவரே மாட்டிறைச்சி அதிகம் சாப்பிடுங்க என்று பேசியிருப்பது அந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயாவில் கால்நாடை பராமரிப்பு துறை அமைச்சராக இருப்பவர் பா.ஜ.க.வின் சன்போர் சுலாய். இவர் அண்மையில்தான் அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த சூழ்நிலையில் சன்போர் சுலாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோழி, மட்டன் மற்றும் மீன்களை விட மாட்டிறைச்சி அதிகம் சாப்பிட நான் மக்களை ஊக்குவிக்கிறேன். ஏனென்றால், பா.ஜ.க. பசு வதை தடுப்பு சட்டம் இயற்றும் என்ற சிறுபான்மை மக்களிடையே தவறான தகவல்கள் உள்ளன.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையானதை சுதந்திரமாக சாப்பிடலாம். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி, மேகாலயாவுக்கு மாடுகளை அனுப்புவதால் அவர்களின் புதிய சட்டம் எந்தவிதத்திலும் மீறப்படாது என்று பேசுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்