மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

M K Stalin
By Swetha Subash May 06, 2022 07:00 AM GMT
Report

சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு | Bedridden Student Medical Expenses Will Be Paid

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மாணவி சிந்து படுத்த படுக்கையாக நேற்று தேர்வு எழுதினார். வாலிபால் வீராங்கனையான இவர் கடந்த ஆண்டு வீட்டின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன.

இதனை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

தேர்வு எழுத இயலாத நிலையிலும் சோர்ந்துவிடாமல் படுத்த படுக்கையாக தேர்வு எழுதியுள்ளார் சிந்து.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.