மாணவியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மாணவி சிந்து படுத்த படுக்கையாக நேற்று தேர்வு எழுதினார். வாலிபால் வீராங்கனையான இவர் கடந்த ஆண்டு வீட்டின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன.
இதனை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
"வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!"
— M.K.Stalin (@mkstalin) May 6, 2022
கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.
விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். (1/2) https://t.co/2zetdutyBn
தேர்வு எழுத இயலாத நிலையிலும் சோர்ந்துவிடாமல் படுத்த படுக்கையாக தேர்வு எழுதியுள்ளார் சிந்து.
இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.