கடலூரில் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி - நடந்தது என்ன? பரபரப்பு சம்பவம்
கடலூரில் பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் காட்சிக்கான டிக்கெட் வழங்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், கடலூர் நகர் பகுதியில் 4 திரையரங்குகளில் விஜய் பீஸ்ட் படம் திரையிடப்பட வேண்டும் என்றும், அப்போது, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒளிபரப்ப வேண்டும என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு ரசிகர் காட்சிக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும் கடலூர்-புதுவை சாலையில் திரையரங்கு முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், விஜய் ரசிகர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். கலைந்துச் செல்லாதவர்களை போலீசார் சட்டையை பிடித்து இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.