‘அரபிக் குத்து’ பாடலில் விஜய் அணிந்திருந்த அந்த டாலர்... - சர்ச்சையை ஏற்படுத்தியவருக்கு ரசிகர்கள் தக்க பதிலடி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது. வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்...
யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸான நடனமும், அனிருத்தின் அசத்தலான இசையும் இப்பாடலுக்கு பலத்தை சேர்த்துள்ளது. யூட்யூப்பில் இதுவரை 41 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 50 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது இப்பாடல்.
தற்போது இப்பாடலில் நடிகர் விஜய், சிலுவை போன்ற நங்கூரம் டாலர் ஒன்றை அணிந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார். இதைப் பார்த்த இந்து மக்கள் கட்சி விமர்சனம் செய்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் ஜோசப் என்பவர், ‘விஜய் தன்னுடைய கழுத்தில் சிலுவை சின்னம் அணிந்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க விஷயம்.
அவர் எந்த கவலையும் இன்றி, உறுதியாக தன்னுடைய மத அடையாளத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதில் என்ன தவறு இருக்க முடியும்’ என பதிவிட்டுள்ளனர். இதற்கு விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
‘யோவ்... அது சிலுவை அல்ல டாலர்... அப்படியே சிலுவை அணிந்திருந்தாலும் ஜோசப் விஜய்ன்னு சொல்லி பிரிவினை ஏற்படுத்த வேண்டாம்’ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலரோ, ‘படமே இன்னும் ரிலீஸ் ஆகல அதுக்குள்ள ப்ரீ புரோமோஷனா?’ என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.