என்ன நடக்கிறது இந்திய அணியில்? - அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சைகள்
இந்திய அணியின் பயிற்சியாளராக நான் வந்து விடக்கூடாது என்பதில் பிசிசிஐயில் சிலர் தீவிரம் காட்டினர் என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி இருந்தபோது அந்த பதவியிலிருந்து பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.ஆனால் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டு அவருக்கும் கேப்டன் கோலிக்கும் சரிவராமல் போக அனில் கும்ப்ளே விலக 9 மாதங்களில் பதவி விலகினார்.
இதனால் மீண்டும் ரவிசாஸ்திரி தலைமைப் பயிற்சியாளர் ஆனார். இதனிடையே நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்த ரவி சாஸ்திரி ஆங்கில ஊடகம் ஒன்றில் மனம் திறந்த பேட்டியளித்துள்ளார்.
அதில் நான் வர்ணனையாளராக என் கரியரை வடிவமைத்துக் கொண்ட போது அந்த வேலையை விட்டு விட்டு வா என்றனர். அணியுடன் இணைய வேண்டும் என்றனர்.ஆனால் நான் வேண்டாதவனாகி விட்டேன். என்னை அனுப்பிய விதம் காயப்படுத்தவே செய்தது. நான் அவ்வளவு பங்களிப்பு செய்துள்ளேன்.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி முடிந்தவுடன் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக விலகினார். ரவிசாஸ்திரி மீண்டும் அழைக்கப்பட்டார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறும்போது, “என்னுடைய இரண்டாவது பதவிக்காலம் பெரிய சர்ச்சை ஓய்ந்த பிறகு தொடங்கியது. என்னை வேண்டாம் என்றவர்கள் முகத்தில் கரி பூசிய சம்பவம். ஒருவரை நியமிக்கின்றனர், 9 மாதம் கழித்து அவர் வேண்டாம் என்று என்னை நியமித்தனர்.
நான் பிசிசிஐ மீது குற்றம்சாட்ட விரும்பவில்லை. குறிப்பிட்ட சில நபர்கள் நான் பயிற்சியாளராக வரக்கூடாது என்று சிலர் விரும்பினர். ஆனால் கடைசியில் என்ன நடந்தது என்ன என்பது அனைவருக்குமே தெரியும். இதுதான் வாழ்க்கை என கூறியுள்ளார்.
ஏற்கனவே விராட் கோலியின் ஒருநாள் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதே சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் தற்போது ரவிசாஸ்திரி தெரிவித்துள்ள கருத்துகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.