ஏன் இப்படி பண்ணீங்க? இந்திய அணி மீது கடும் கோபத்தில் பிசிசிஐ
பிசிசிஐ-யின் அனுமதி பெறாமல் ரவி சாஸ்திரி எழுதிய புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு வீரர்கள் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் ரவி சாஸ்திரி எழுதிய புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே கடந்த 6ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அவருடன் தொடர்பில் இருந்த அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபி நிபுணர் நிதின் படேல் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் அருண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பயிற்சியாளர்களும், வீரர்களும் புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக பிசிசிஐ தரப்பில் இருந்து அனுமதி பெறாமல் சென்றுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கெடுத்தது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இந்திய அணி வீரர்கள் செல்ல வேண்டாம் எனவும், இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பிசிசிஐ தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.