‘அப்படிப்போடு.. புதிதாக 2 ஐபிஎல் அணிகள் அறிமுகம்’ - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பால் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
14 ஆண்டுகளாக நடக்கும் இத்தொடரில் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய 8 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மேலும் புதிதாக இரு அணிகளைச் சேர்க்க முடிவு செய்துள்ள பிசிசிஐ அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விருப்ப மனு தாக்கல் செய்யும்போது ரூ.75 கோடி முன்பணமாக செலுத்த வேண்டும் என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.1700 கோடி முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டு ரூ.2 ஆயிரம் கோடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இரு அணிகள் புதிதாக வருவதன் மூலம் பிசிசிஐ அமைப்புக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்தப் புதிய அணிகள் அகமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதானி குழுமம், ஆர்பிஜி சஞ்சீவ் கோயங்கா குழுமம், டோரன்ட் மருந்து நிறுவனம், புகழ்பெற்ற தனியார் வங்கி ஆகியவை அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.