விராட் கோலியை கொண்டாட தயாராகும் பிசிசிஐ - என்ன காரணம் தெரியுமா?
இந்தியா - இலங்கை தொடருக்கான தேதிகளை மாற்றி பிசிசிஐ புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும், இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடனும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதனையடுத்து நடக்கவுள்ள இந்தியா, இலங்கை தொடரில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக வந்து டெஸ்ட்டில் விளையாட கடினமாக இருக்கும் என்பதால் முதலில் டி20 தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்ற பிசிசிஐ புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி லக்னோவிலும், 2வது டி20 போட்டி வரும் 26ஆம் தேதி தர்மசாலாவிலும், அடுத்த நாள் 3வது டி20 போட்டி அதே தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேபோல் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி மொஹாலியிலும், 2வது டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவில் பகல் இரவு ஆட்டமாகவும் நடக்கவுள்ளது. இதில் எந்த போட்டியில் விளையாடினாலும் அது விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும். எனவே இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற விராட் கோலி பெங்களூரில் தான் தனது 100வது டெஸ்டை விளையாட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.