நாட்டின் உயரிய விருதுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் பெயர் பரிந்துரை
மத்திய அரசின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2017 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கண்ட விருதுகளுக்கான பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஏற்கனவே பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக இந்திய ஆண்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. இதேபோல் அர்ஜுனா விருதுக்காக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பேட்ஸ்மேன்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக வீரரான அஸ்வின் இதுவரை 78 டெஸ்ட், 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடி 615 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதேபோல் மிதாலி ராஜ் இதுவரை 11 டெஸ்டுகளிலும் 215 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 56-வது அரை சதத்தை மிதாலி ராஜ் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முதல்முறையாக ஒரே ஆண்டில் 5 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை மணிகா பத்ரா, ரோகித் சர்மா, வினேஷ் போகாத், ராணி ராம்பால் மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் பெற்றனர்.