விராட் கோலி கனவில் மண்ணை அள்ளிப் போட்ட பிசிசிஐ - கடுப்பான ரசிகர்கள்
இலங்கை அணியுடனான தொடரின் அட்டவணை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விராட் கோலி ரசிகர்கள் பிசிசிஐ மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்ததாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற இருந்த டெஸ்ட் தொடரை கடைசியாக நடத்த வேண்டுமென கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுக்க அதனை ஏற்ற பிசிசிஐ முதலில் டி20 தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் வரும் மார்ச் 3 ஆம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை தனது 2வது வீடாக கருதும் பெங்களூருவில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த அட்டவணையின்படி தனது 100ஆவது போட்டியை பெங்களூருவில் விளையாட இருந்தார். ஆனால் தற்போது பிசிசிஐ செய்த செயல் வேண்டுமென்று நிகழ்த்தப்பட்டதா என கோலியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.