புதிய ஐபிஎல் அணிகளுக்கு ஆரம்பமே சிக்கல் - பிசிசிஐயுடன் கருத்து மோதல்
2022 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை கொடுக்க காலக்கெடு விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் மேலும் இரு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் மிகப்பெரிய அளவில் வீரர்களின் ஏலமும் நடக்கவுள்ளது.
புதிய அணிகளின் வருகையால் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற குழப்பம் இருந்த நிலையில் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் என்ற வகையில் தக்க வைக்கலாம். அப்படி இல்லையென்றால் 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 அயல்நாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய அணிகள் இரண்டும் ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய அணிகள் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களை அறிவித்த பின்னர் மீதமுள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பழைய அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கு முன்னதாகவே நாங்கள் ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் எனக்கோரி வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது தக்கவைக்கப்போகும் வீரர்களின் பெயர்களை டிசம்பர் 3ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது. இதே போல ஐபிஎல் மெகா ஏலம் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.