அப்ப இந்த வருஷமும் இங்க இல்லை? கொரோனாவால் இடம் மாறும் ஐபிஎல்? புதிய ப்ளான் போடும் பிசிசிஐ
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மாற்று இடம் தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஐபிஎல் தொடரில் இம்முறை 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலமும் நடைபெற உள்ளது. அந்த ஏலம் அடுத்த மாதம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருக்கும் பட்சத்தில் அடுத்து ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்று பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரை யுஏஇயில் இல்லாமல் தென்னாப்பிரிக்காவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால் கடந்த இரண்டு முறை கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதனால் மீண்டும் ஐபிஎல் தொடரை யுஏஇயில் நடத்த இம்முறை பிசிசிஐ அதிக ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
அதேசமயம் யுஏஇ தவிர மற்ற இடங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ பரிசீலித்தது வந்ததாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-யை பொறுத்தவரை அவர்களுடைய முதல் விருப்பம் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்பது தான். ஆனால் இந்தியாவில் அதற்கான சூழல் அமையாத பட்சத்தில் தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் தொடரை நடத்த கிட்டதட்ட அவர்கள் இரண்டாவது விருப்பமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே 2009ஆம் ஆண்டு இரண்டாவது ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.