இத நீங்க செஞ்சே ஆகனும்..ஐசிசிக்கு கட்டளையிடும் சுனில் கவாஸ்கர்
துபாய் ஆடுகளங்களில் டாஸ் வென்றால் போட்டியில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் துபாய்க்கு மாற்றப்பட்டது.
டி.20 உலகக்கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகள் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றாலும், டாஸே இந்த தொடரில் மிக முக்கிய பங்காற்றியது.
ஒரு அணி டாஸ் வென்றுவிட்டால் அந்த அணியே வெற்றி பெறும் என்ற நிலைக்கு ரசிகர்களே வந்துவிட்டனர். அந்த அளவிற்கு டி.20 உலகக்கோப்பையில் ஒவ்வொரு அணியின் வெற்றியிலும் டாஸ் மிக முக்கிய காரணியாக இருந்தது.
அதிலும் குறிப்பாக நாக்அவுட் போட்டிகள் அனைத்திலும் டாஸ் வென்ற அணிகளே வெற்றி பெற்றன. அதே போல் இறுதி போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியே வெற்றியும் பெற்றது.
ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றிக்கு தகுதியானது தான் என்றாலும், ஒருவேளை டாஸை இழந்திருந்தால் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற்றிருக்க முடியுமா..? என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்றே வருகிறது.
டாஸ் வென்ற அதிர்ஷ்டத்தால் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டதாக முன்னாள் வீரர்கள் சிலர் பேசி வருகின்றனர்.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், டாஸில் வெற்றி பெற்றால் போட்டியில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “இறுதிப்போட்டியின்போது பனிப்பொழிவு இல்லை என்று வர்ணனையாளர்கள் கூறினார்கள்.
எனவே பனிப்பொழிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஆடிய போட்டிகளின்போது பனிப்பொழிவு இருந்தது.
பனி இல்லையென்றாலும், வேறு ஏதோ ஒரு பிரச்னை இருக்கிறது. அது என்னவென்று கண்டறிய வேண்டும். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி இதுதொடர்பாக ஆராய்ந்து,
ஒரு போட்டியில் ஆடும் இரு அணிகளுக்கும் ஒரே லெவல் ஃபீல்ட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.