2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் பிசிசிஐ...!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பிசிசிஐ அமைப்பு வழங்கவுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை தீவிரமடைந்த நிலையில், கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் மக்களில் சிலருக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்தச் சிக்கலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உதவும் வகையில், பிசிசிஐ அமைப்பு, 10 லிட்டர் கொண்ட 2000 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்க முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ்-க்கு எதிராக நாம் போராடும் இச்சூழலில் மருத்துவத்துறை மிகச்சிறப்பாகப் பணியாற்றி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உடல்நலம், பாதுகாப்புக்கு பிசிசிஐ எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.